செல்போன் பார்த்ததை கண்டித்த தாய் - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

செல்போன் பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை அவரது தாய் கண்டித்து, அறிவுரை கூறியுள்ளார்.
செல்போன் பார்த்ததை கண்டித்த தாய் - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் எல்.கே.சி. நகரை சேர்ந்தவர் குணசேகர். ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராணி. இந்த தம்பதியின் மகள் புனிதவதி (28 வயது). பி.எச்.டி. படித்து முடித்துள்ள புனிதவதி திருமணம் வேண்டாம் என்று கூறிவந்தார். மேலும் இவர் எப்போதும் செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் நேற்று முன்தினமும் புனிதவதி செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார். இதை அவரது தாய் கண்டித்து, அறிவுரை கூறினார். இதனால் தாய்க்கும், மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த புனிதவதி, சூரா ரெட்டிவலசில் உள்ள தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மகளை காணாத பெற்றோர் அவரை தேடி சூரா ரெட்டிவலசில் உள்ள தோட்டத்துக்கு சென்றனர். அங்கு வாந்தி எடுத்த நிலையில் புனிதவதி மயங்கி கிடந்தார். அப்போதுதான் அவர் அதிக எண்ணிக்கையில் மாத்திரைகளை தின்று இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அவரை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புனிதவதி உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com