

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் தாய் படிக்க சொல்லி கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் மகன் பிரேம் ஆனந்த் (12 வயது). இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பிரேம் ஆனந்தை அவருடைய தாய் சுமதி, படிக்கச் சொல்லி கண்டித்துள்ளார். இதையடுத்து பார்த்திபனும், சுமதியும் தங்களது வயலுக்கு சென்று விட்டனர்.
இதற்கிடையே மனமுடைந்த பிரேம் ஆனந்த், வீட்டிற்குள் சென்று அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பிரேம் ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.