

கோயம்புத்தூர்,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள தம்மம்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30 வயது). கூலித்தொழிலாளி. இவருக்கும், சரோஜினி (25 வயது) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நிவன்யாஸ்ரீ என்ற 1½ வயது பெண் குழந்தை இருந்தது.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சரோஜினி கோபித்துக் கொண்டு சேத்துமடையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால் மணிகண்டனும் அங்கு சென்று மாமியார் வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். அப்போது, சரோஜினிக்கும் பொம்மன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த மணிகண்டன் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
ஆனால் சரோஜினி, கள்ளக்காதலனுடன் வாழ ஆசைப்பட்டு, தன்னை அழைத்துச்செல்லுமாறு பொம்மனிடம் கூறியுள்ளார். அதற்கு பொம்மன், குழந்தை நிவன்யாஸ்ரீ நமக்கு இடையூறாக இருக்கிறாள், அவளைக் கொன்றுவிட்டால் நாம் நிம்மதியாக வாழலாம் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதற்கிடையே, கடந்த 13.8.2021 அன்று மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தையை தம்மம்பதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
மறுநாள் (14.8.2021) காலையில், மணிகண்டன் வேலைக்குச் சென்றார். அவரது பெற்றோர் வீட்டின் வெளியே அமர்ந்திருந்த நேரத்தில், காலை 10 மணியளவில் சரோஜினி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நிவன்யாஸ்ரீயை வீட்டிற்குள் தூக்கிச் சென்றுள்ளார். கள்ளக்காதலன் பொம்மன் சொன்னபடி, குழந்தையைக் கொன்றுவிட்டால் அவருடன் நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணத்தில், படுக்கை அறையில் வைத்து குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிகிறது.
பின்னர் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடற்கூறாய்வு அறிக்கையில், குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், ஆனை மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரோஜினியைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கோவை 5-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.கே.சிவக்குமார், சரோஜினிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.