பெற்ற தாயை அடித்த மகன்களை தட்டிக்கேட்ட போலீசார் மீது தாக்குதல் 13 பேர் கைது

பெற்ற தாயை அடித்த மகன்களை தட்டிக்கேட்ட 3 போலீஸ்காரர்களை தாக்கியதுடன், ரோந்து வாகனங்களையும் அடித்து நொறுக்கியதாக பெண்கள் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெற்ற தாயை அடித்த மகன்களை தட்டிக்கேட்ட போலீசார் மீது தாக்குதல் 13 பேர் கைது
Published on

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி மேல்பட்டி பொன்னையன் தெருவில் நேற்று முன்தினம் இரவு எம்.கே.பி. நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன்(வயது 28), ராஜா(26) மற்றும் தலைமைக்காவலர் வேலாயுதம்(48) ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கு ஒரு மூதாட்டியை 2 பேர் சேர்ந்து அடிப்பதாக அவர்களுக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று, மூதாட்டியை அடித்த 2 பேரையும் தடுத்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், வியாசர்பாடி சஞ்சய் நகரைச்சேர்ந்த சத்யராஜ்(34), அவருடைய தம்பி செல்வம்(30) என்பதும், இருவரும் சேர்ந்து தங்களை பெற்ற தாயான வசந்தாவை(60) அடித்தது தெரிந்தது.

அப்போது அவர்கள், எங்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். எங்களை ஏன் தடுக்கிறீர்கள்? என்று கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த போலீசார், அண்ணன்-தம்பி இருவரையும் தாக்கியதாக தெரிகிறது.

இதை கண்ட அவர்களின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து போலீஸ்காரர்கள் 3 பேரையும் உருட்டுக்கட்டைகளாலும், கையாலும் சரமாரியாக தாக்கினர். சத்யராஜ், செல்வம் மற்றும் அவருடைய தாயார் வசந்தா ஆகியோரும் அவர்களுடன் ஒன்று சேர்ந்து போலீசாரை தாக்கினர். மேலும் போலீஸ் ரோந்து வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினர்.

பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த 3 போலீஸ்காரர்களும் ரத்த காயங்களுடன் மயங்கி விழுந்தனர். இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கிருந்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சியாமளாதேவிக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து புளியந்தோப்பு உதவி கமிஷனர் விஜய்ஆனந்த், இன்ஸ்பெக்டர்கள் ஜோதிலட்சுமி, சித்ரா, புகழேந்தி, தமிழ்வாணன், மோகன்ராஜ் மற்றும் போலீசார் என 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ராஜா மற்றும் தலைமைக்காவலர் வேலாயுதம் ஆகியோரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் சத்யராஜ், அவருடைய தம்பி செல்வம், இவர்களின் தாயார் வசந்தா மற்றும் இவர்களின் உறவினர்களான நித்யமணி(46), ராணி(49), சலோமியா(43), சிவகாமி(36), பார்வதி(25), கிறிஸ்டோபர்(42), ஜான்வர்கீஸ்(43), ராஜேஷ்(23), ரவி(35), சுரேஷ்(35) என 6 பெண்கள் உள்பட 13 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கைதான 13 பேர் மீதும் போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தியது, போலீஸ்காரர்களை தாக்கியது என 6 பிரிவுகளின் கீழ் எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 13 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com