ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் திருவடி சேவை நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் திருவடி சேவை
Published on

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் திருவடி சேவை நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

நவராத்திரி உற்சவம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னதியில் தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பெருமாள் கோவில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கநாச்சியார் படிதாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

திருவடி சேவை

இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி ரெங்கநாச்சியார் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். கொலு இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு முடிவடைந்தது. அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com