வீட்டு வேலை செய்ய சொன்ன தாய்... பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

வீட்டு வேலை செய்ய சொன்னதால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கீழக்கொந்தை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியின் மூத்த மகள் சுபஸ்ரீ (17 வயது). இவர் சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுபஸ்ரீ வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் சாந்தி வீட்டில் உள்ள துணியை துவைக்க வேண்டும் என்றும், சமைக்க வேண்டும் என்றும் சுபஸ்ரீயிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சுபஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் சுபஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






