நடுரோட்டில் தாய்-மகள் குத்திக்கொலை மீனவர் வெறிச்செயல்

கடலூரில் நடுரோட்டில் தனது மனைவி, மாமியாரை மீனவர் குத்திக்கொலை செய்தார்.
நடுரோட்டில் தாய்-மகள் குத்திக்கொலை மீனவர் வெறிச்செயல்
Published on

கடலூர்,

கடலூர் துறைமுகம் அருகே உள்ள சலங்குக்கார தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 52). இவரது மனைவி பூங்கொடி(48). இவர்களுடைய மகள் மீனா (26). இவருக்கும், சோனங்குப்பத்தை சேர்ந்த நம்புராஜ் (30) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரியா (3), ஜான்சி (1) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான நம்புராஜ், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த ஓராண்டாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

உடல்நலம் பாதிப்பு

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீனா, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சலங்குக்கார தெருவில் உள்ள பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. இருப்பினும் மீனாவுக்கும், நம்புராஜிக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று குழந்தை ஜான்சிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் மீனாவும், அவரது தாய் பூங்கொடியும் மருத்துவமனைக்கு செல்ல முடிவுசெய்தனர். அதன்படி இருவரும், நேற்று மாலை 6.30 மணி அளவில் குழந்தையை தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்றனர்.

கத்திக்குத்து

கடலூர் முதுநகர் சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த நம்புராஜ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பூங்கொடியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா அவரை தடுக்க முயன்றார். உடனே நம்புராஜ், மீனாவின் கழுத்திலும் குத்தினார்.

இதில் தாய்-மகள் இருவரும் நடுரோட்டிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.

தாய்-மகள் சாவு

உடனே நம்புராஜ், தனது குழந்தையை மட்டும் ஏதும் செய்யாமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து சிறிது நேரத்திலேயே பூங்கொடியும், மீனாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான பூங்கொடி, மீனா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நம்புராஜை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com