அன்னையின் பிறப்பு பெருவிழா தேர்பவனி

பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா தேர்பவனியை கும்பகோணம் பிஷப் தொடங்கி வைத்தார்.
அன்னையின் பிறப்பு பெருவிழா தேர்பவனி
Published on

திருக்காட்டுப்பள்ளி:

பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா தேர்பவனியை கும்பகோணம் பிஷப் தொடங்கி வைத்தார்.

அன்னையின் பிறப்பு பெருவிழா

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம். இந்த பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறுசப்பரபவனியும், பல்வேறு அருட்தந்தையர்களால் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.

அன்னையின் பிறப்பு நாளான நேற்று மாலை சிறப்பு திருப்பலி கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்டது. இத்திருப்பலியில் பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணைஅதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், மறை வட்ட முதன்மை குரு இன்னசென்ட், உதவி பங்கு தந்தையர் அமல வில்லியம், அன்புராஜ், ஆன்மிக தந்தையர் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

தேர்பவனி

திருப்பலி நிறைவடைந்ததும் பூண்டி மாதா பேராலயத்தின் முகப்பில் வண்ண வண்ண மின்விளக்குகளாலும், மல்லிகை மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார். தேர் பவனியின் போது திரண்டு இருந்த பக்தர்கள் கைகளை உயர்த்தி மரியே வாழ்க என முழக்கமிட்டு அன்னையை வணங்கினர். இன்று காலை (சனிக்கிழமை) திருவிழா நன்றி திருப்பலியுடன்பூண்டி மாதா பேராலயத்தின் அன்னையின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவையொட்டி பூண்டி மாதா பேராலயம் மற்றும் பேராலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தேர்பவனியை முன்னிட்டு திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com