அன்னையர் தினம்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

கோப்புப்படம்
தாய்மையின் மகத்துவத்தை போற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அன்னையர் தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "அன்பின் முழு வடிவமாகவும், தியாகத்தின் முழு உருவமாகவும், பிரபஞ்சத்தின் வாழ்வை அழகாய்; அர்த்தமாய் மாற்றிடும் உயிரும் மெய்யுமான
ஒப்பற்ற அன்னையின் மகத்துவத்தை போற்றுவதோடு உயிருக்குள் உயிர் கொடுத்து உதிரத்தை உணவாக்கி உலகத்தை உனதென தந்த உன்னத அன்னையர் அனைவருக்கும் "அன்னையர் தினம்" வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பதிவில், "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார் ஒளவை பிராட்டி. அதாவது, அன்னைதான் ஒவ்வொருவரும் இந்த உலகில் காணும் முதல் தெய்வம். அன்னையரின் தன்னலமற்ற தியாகத்தினை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தின நாளான இன்று அன்பு, பாசம், அரவணைப்பு, தன்னலமற்ற தியாகம் ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் அன்னையர்களுக்கு எனது அன்னையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், "மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வாழ்வியல் தத்துவத்தில் முதலிடம் வகிப்பதோடு, அதீத அன்புக்கும், அளவற்ற பாசத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் சிறந்த அடையாளமாக திகழும் அன்னையர்களை போற்றிக் கொண்டாடும் அன்னையர்களின் தினம் இன்று.
தமிழக மக்களின் மகிழ்ச்சியே தனது லட்சியம் எனக்கூறி நாடு போற்றும் நல்ல பல திட்டங்களை தாயுள்ளத்தோடு செயல்படுத்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வில் வளத்தையும், வசந்தத்தையும் ஏற்படுத்திய ஜெயலலிதா அவர்களை இந்நேரத்தில் நினைவுகூற நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
அன்பில் இணையற்றவர்களாக, பண்பில் நிகரற்றவர்களாக, பாசத்தில் ஈடற்றவர்களாக எத்தகைய சவால்களையும், சோதனைகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு வாழும் தெய்வங்களாக வலம் வரும் அன்னையர்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள பதிவில், "சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது! என்கிறார் நபிகள் நாயகம்! ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்! ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை! எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்! ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது! மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு தாய் மட்டும்தான்!
இந்த உலகில் நீ எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் உன்னைக் கண்டு பொறாமைப்படாத ஒரேயொரு உயிர் உண்டென்றால், அது உன்னைப் பெற்ற தாய்தான்! வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்! கண்கள் இல்லாமல் பார்த்தேன்! காற்று இல்லாமல் சுவாசித்தேன்! கவலையில்லாமல் வாழ்ந்தேன்! என் தாயின் கருவறையில்! கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது!
அதனால்தான் உலகப் பந்தங்கள் எல்லாவற்றையும் துறந்து, துறவியான பட்டினத்தடிகளார் கூட, தாய்ப்பாசத்தை மட்டும் துறக்க முடியாமல், 'ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி' என்று உருகுகிறார். அன்னையைப் போலொரு தெய்வமில்லை; அவர் அடிதொழ மறப்பவர் மண்ணில் மனிதரில்லை! நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறு ஏது?
தாய்மையைப் போற்றுவோம்! தாய்மையை வணங்குவோம்! நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்!" என்று தெரிவித்துள்ளார்.






