

திரு.வி.க.நகர்,
சென்னை மாதவரம் பால்பண்ணையை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகள் பிரியா (வயது 18). இவர், பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை பிரியா, ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் படிக்கும் தனது நண்பரான மாதவரத்தை சேர்ந்த அப்துல் மாலிக்(18) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் ராயபேட்டையில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
ஓட்டேரி வழியாக பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலத்தின் மையப்பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அப்துல் மாலிக், மேம்பாலத்திலும், அவருக்கு பின்னால் அமர்ந்து வந்த மாணவி பிரியா, மோதிய வேகத்தில் தடுப்பு சுவரை தாண்டி சுமார் 40 அடி உயரம் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள சர்வீஸ் சாலையில் வந்து விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரியாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரியா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் பிரியாவின் நண்பரான அப்துல் மாலிக் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பலியான மாணவி பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மிகவும் வளைவான இந்த மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து அப்துல் மாலிக்கிடம் விசாரித்து வருகின்றனர்.