தேசிய நெடுஞ்சாலையில் 135 இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு ‘நெட்வொர்க்’ கிடைப்பது இல்லை

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடுமுழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆய்வை மேற்கொண்டது.
தேசிய நெடுஞ்சாலையில் 135 இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு ‘நெட்வொர்க்’ கிடைப்பது இல்லை
Published on

சென்னை,

இந்தியாவில் சுமார் 64 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை வசதி உள்ளது. இதில் தோராயமாக 1 லட்சத்து 47 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலையானது மலைகள், ஆறுகள், காடுகள் என பல்வேறு வகையான நிலபரப்புகளை கடந்து இந்திய வரைபடத்தின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரியையும், வட எல்லையில் உள்ள காஷ்மீரையும் இணைக்கிறது.

இந்தநிலையில், குடியிருப்புகள் இல்லாத இடங்கள், மலை, காடுகளை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது சில இடங்களில் வாகன ஓட்டிகள் செல்போன்களை பயன்படுத்த முடியாதவாறு 'நெட்வொர்க்' பிரச்சினைகளை சந்தித்து வருவதாக ஏராளமான புகார்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு வந்தது.

இதனைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆய்வை மேற்கொண்டது. இதில், தேசிய நெடுஞ்சாலையில் 135 இடங்களில் வாகன ஓட்டிகள் அவசரகாலத்தில் கூட யாரையும் தொடர்புகொள்ளமுடியாத அளவுக்கு செல்போன்களுக்கு 'நெட்வொர்க்' கிடைக்காதது தெரியவந்தது.

இதில் அதிகபட்சமாக கர்நாடக எல்லையில் 36 இடங்களிலும், ராஜஸ்தான் எல்லையில் 23 இடங்களிலும், ஆந்திர எல்லையில் 22 இடங்களிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 'நெட்வொர்க்' கிடைப்பதில்லை. தமிழ கத்தை பொறுத்தமட்டில் தேசிய நெடுஞ்சாலையில் 3 இடங்களில் நெட்வொர்க் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com