பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

குன்னூர் மாடல் அவுஸ் பகுதியில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
Published on

குன்னூர்

குன்னூர் மாடல் அவுஸ் பகுதியில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சாலை பெயர்ந்தது

குன்னூர் நகராட்சியில் 20-வது வார்டுக்கு உட்பட்ட மாடல் அவுஸ் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் பிற இடங்களில் இருந்து தங்கள் பகுதிக்கு வர உழவர் சந்தையில் இருந்து குடியிருப்புக்கு செல்லும் சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ரூ.20 லட்சம் செலவில் சாலை சீரமைக்கப்பட்டது.

அந்த சமயத்தில் பலத்த மழை பெய்ததால், சாலை சீரமைப்பு பணிக்காக சாலையில் கொட்டப்பட்டு இருந்த கட்டுமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டது. அப்போது சாலையின் ஒரு பகுதி பெயர்ந்தது. இதனால் சாலை குண்டும், குழியுமாக மோசமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்தநிலையில் மாடஸ் அவுஸ் பகுதிக்கு செல்லும் சாலையை மீண்டும் சீரமைக்க நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தரமாக அமைக்க வேண்டும்

இந்த பணியை தரமானதாக மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட பின்னர், மீண்டும் அந்த சாலையில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சீரமைப்பு பணி மேற்கொள்ளக்கூடாது. அந்த காலக்கெடுவிற்குள் சாலை பழுதடைந்தால், தரமாக சாலை அமைக்கவில்லை என்பது தெரிந்து விடும். மாடல் அவுஸ் சாலை தரமாக அமைக்கப்பட வில்லை. 1 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் சாலை சீரமைப்பு பணி தொடங்க உள்ளது.

இந்த முறையாவது சாலை சீரமைப்பு பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்பு அந்த வழியாக கனரக வாகனங்கள் சென்று வந்தன. தற்போது சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் நான்கு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com