தமிழ்நாடு மின்சார வாரியம் - ஐஐடி சென்னை இடையே அமைச்சர் நிர்மல் குமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பொறியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் -  ஐஐடி சென்னை இடையே அமைச்சர் நிர்மல் குமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) – ஐஐடி, சென்னை (IIT Madras) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் முன்னிலையில் கையெழுத்தானது

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இன்று (09.07.2026) காலை 10.00 மணியளவில், சென்னை, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் முன்னிலையில், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, மின் சேவைகளின் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் தரத்தினை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தினை தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சியின் தலைவர் முனைவர். மனு சந்தானம் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.

நீண்டகால ஒத்துழைப்பு

மாநிலத்தின் மின்துறையை உலகத் தரத்திற்கேற்ப நவீனமயமாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் பகிர்மானம் மற்றும் பசுமை எரிசக்தித் துறைகளில் புதிய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், மின்கட்டமைப்பை மேம்படுத்துதல், செயல்திறனை உயர்த்துதல், செலவினச் சிக்கனத்தை ஏற்படுத்துதல், நிபுணத்துவ தொழில்நுட்ப ஆய்வுகள் (Technical Expert Audits), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) பணிகளை ஊக்குவித்தல், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML), தரவு பகுப்பாய்வு (Data Analytics), டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் தரவுவழி சார்ந்து முடிவெடுத்தல் (Data-driven Decision Making) ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நீண்டகால ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கிறது.

மேலும், மின்கட்டமைப்பின் நிகழ்நேர கண்காணிப்பு, மையப்படுத்தப்பட்ட தரவுக் களஞ்சியம் (Data Centre), மையப்படுத்தப்பட்ட மின் கணக்கியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பாதுகாப்பான ஒருங்கிணைப்பு, மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems – BESS), டிஜிட்டல் ட்வின் (Digital Twin), விரிவாக்கப்பட்ட மெய்நிகர் தொழில்நுட்பங்கள் (AR/VR), அனல்மின் நிலைய செயல்திறன் மேம்பாடு, புதிய தொழில்நுட்ப விளக்கத் திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் அதிகாரிகள், பொறியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.

நீடித்த மின்கட்டமைப்பு

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை நிறுவனங்களான தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL), தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO), தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் (TNPGCL) மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் (TNGECL) ஆகியவை எதிர்கொள்ளும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு சவால்களுக்கு ஐஐடி சென்னை தனது உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் மூலம் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்கும். மேலும், கூட்டு ஆராய்ச்சி, கொள்கை ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள், திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால மின்துறை தேவைகளுக்கான புதிய தீர்வுகளை உருவாக்குவதற்கான நீண்டகால கூட்டாண்மைக்கும் இவ்வொப்பந்தம் வலுவான அடித்தளமாக அமையும். மேலும், இதன்மூலமாக நிலைத்த மற்றும் நீடித்த மின்கட்டமைப்பினை உறுதி செய்து, தடையற்ற மின் விநியோகம் வழங்க இயலும்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை அரசு செயலாளர் அனில் மேஷ்ராம், ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., ஐஐடி சென்னையின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் வி. காமகோடி, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர ம. கோவிந்த ராவ், ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பி. என். ஸ்ரீதர், ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) ஐ. சா. மெர்சி ரம்யா, ஐ.ஏ.எஸ்., ஐஐடி சென்னை பேராசிரியர்கள் மற்றும் மின்வாரிய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com