வேளாண் மசோதா பற்றி மு.க. ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்; முதல் அமைச்சர் பழனிசாமி

வேளாண் மசோதா பற்றி மு.க. ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார் என்று முதல் அமைச்சர் பழனிசாமி இன்று கூறியுள்ளார்.
வேளாண் மசோதா பற்றி மு.க. ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார்; முதல் அமைச்சர் பழனிசாமி
Published on

ராமநாதபுரம்,

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணிக்கு சென்ற முதல்வர், ரூ.70 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 220 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.24 கோடியே 24 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் 844 புதிய திட்டப்பணிகள், அரசு கட்டிடங்களை திறந்தும் வைத்தார்.

தொடர்ந்து, லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவிக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி உள்ளிட்ட 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.167.61 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல், திட்டங்கள் திறந்து வைப்பு, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் முதல் அமைச்சருடன், செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் முதல் அமைச்சர் பழனிசாமி பேசும்பொழுது, வேளாண் மசோதா பற்றி மு.க. ஸ்டாலின் தெரியாமல் பேசுகிறார். வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளை பாதிக்க கூடிய எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை ஒட்டியே இந்த சட்டமும் உள்ளது.

பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் வேளாண் சட்டத்தில் குறைகாண முடியாது. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என்று கூறினார்.

தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது. தமிழகத்தில்தான் அதிக அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com