எம்.பி. பதவிக்காக 2 கட்சிகளிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சுவார்த்தை; வெற்றிவேல் குற்றச்சாட்டு

எம்.பி. பதவிக்காக 2 கட்சிகளிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என வெற்றிவேல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
எம்.பி. பதவிக்காக 2 கட்சிகளிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சுவார்த்தை; வெற்றிவேல் குற்றச்சாட்டு
Published on

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதற்கிடையே, தங்கதமிழ்செல்வனுக்கு டி.டி.வி.தினகரன் மீதும், அ.ம.மு.க. மீதும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் அவர் இணைய உள்ளதாகவும், இதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த அமைச்சர்களை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனாலும் அவர் இந்த தகவல்களை தொடர்ந்து மறுத்து வந்தார்.

இந்த நிலையில், தங்கதமிழ்செல்வனை கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை தேர்வு செய்ய உள்ளோம் என கட்சி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் தினகரன் கூறியுள்ளார்.

இதுபற்றி தங்க தமிழ்ச்செல்வன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தினகரனுடன் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடு இருந்தது; வீடியோ, ஆடியோ வெளியிடுவது நல்ல பண்பாடு இல்லை. ஓ.பி.எஸ்., பொன்.ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோருடன் நடந்த சந்திப்பை தினகரன் வெளியில் சொல்வது நல்ல பண்பாக தெரியவில்லை.

தற்போது மன நிறைவோடு இருக்கிறேன். அ.தி.மு.க.வில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. எந்த கட்சியிலும் சேர நான் விரும்பவில்லை. யாரும் என்னிடம் பேசவும் இல்லை.

18 எம்.எல்.ஏ.க்கள் இல்லையென்றால் தினகரனே இல்லை. அவர்கள் குடும்பம் என்ன கஷ்டப்படுகிறது என எனக்கு தெரியும். சம்பளம் வாங்கி கொண்டா கட்சியில் இருக்கிறேன்? சம்பளம் கொடுத்து கட்சியில் வேலை வாங்குகிறார்களா என்ன..? ஏன் பெட்டி பாம்பாக அடங்க வேண்டும்? அ.ம.மு.க.வில் நிர்வாகம் சரியில்லை. தினகரனுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை.

தினகரன், 'ஒன் மேன் ஆர்மி'யாக வேலை செய்வதால், பலர் வெளியே வந்துவிட்டனர். எஞ்சியவர்களும் வெளியே வருவார்கள் என கூறினார்.

தங்க தமிழ்ச்செல்வனின் இந்த பேட்டிக்கு பதில் தரும் வகையில் அ.ம.மு.க. நிர்வாகி வெற்றிவேல் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், எம்.பி. பதவிக்காக 2 கட்சிகளிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை போய் கொண்டு இருக்கிறது.

எம்.எல்.ஏ. என்பது எழுதி கொடுக்கப்பட்ட நிரந்தர பதவி அல்ல. கட்சியை விட்டு வெளியேறும்பொழுது குற்றச்சாட்டு சொல்வது இயல்பு. இவ்வளவு நாள் குற்றச்சாட்டு கூறாமல் இருந்தது ஏன்? கடந்த வெள்ளிக்கிழமை அவர் யாரை சந்தித்து பேசினார்? என கேள்விகளை எழுப்பியுள்ளார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com