மழை எச்சரிக்கையின்போது காசி தமிழ் சங்கமம் ரெயிலை தொடங்கி வைத்தது ஏன்? - எம்.பி.வெங்கடேசன் கேள்வி

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மழை எச்சரிக்கையின்போது காசி தமிழ் சங்கமம் ரெயிலை தொடங்கி வைத்தது ஏன்? - எம்.பி.வெங்கடேசன் கேள்வி
Published on

சென்னை,

தமிழக மழை வெள்ள நிவாரணம் குறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துகளுக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்புக் குரல்கள் பெருகி வருகின்றன.

இதுபற்றி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்

"நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12 ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் நிதியமைச்சர்.

அப்படியென்றால் 17 மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச்சங்க ரெயிலின் துவக்கவிழாவை பிரதமரே நடத்திவைத்தாரே எப்படி? கொட்டும் பேய்மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி?

அன்றைய தினம் கடும்மழையால் தென்மாவட்டங்களில் பல ரெயில்களை ரத்து செய்யமுடியாமல் போனதற்கு இவ்விழாவே காரணம் என ரெயில்வே அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? வானிலையின் இவ்வளவுப் பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதும், ஶ்ரீவைகுண்டத்தில் அது சிக்கிக்கொண்டு பயணிகள் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு?

தனது அரசின் கீழ் இயங்கும் வானிலை அறிக்கையை அறியாத பிரதமரா? அல்லது என்னவானாலும் என்ன.. தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற மனநிலையா?

நிதியமைச்சர் அவர்களே! மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று தாங்கள் சொன்ன திசைதிருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள்.

இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுபெறுங்கள்."

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com