சென்னை மாநகராட்சி கட்டிட வளாகத்தில் முதல்வர் மருந்தகம் ; மேயர் பிரியா திறந்து வைத்தார்...!


சென்னை மாநகராட்சி கட்டிட வளாகத்தில் முதல்வர் மருந்தகம் ; மேயர் பிரியா திறந்து வைத்தார்...!
x

முதல்வர் மருந்து கடைகள் மூலம் ஜெனரிக் வகை மருந்துகள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன

சென்னை

சென்னை எழும்பூர் பெரியமேடு பகுதியில் உள்ள ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி அலுவலகம் உள்ளது. மாநகராட்சி கட்டிட வளாகத்தில் முதல்வர் மருந்தகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. சென்னை மேயர் பிரியா முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

சென்னை மேயர் பிரியா ரிப்பன் கட்டட வளாகத்தில் முதல்வர் மருந்தகத்தினை இன்று (08.10.2025) திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, இன்று (08.10.2025) சென்னை மேயர் பிரியா , ரிப்பன் கட்டட வளாகத்தின் பெரியமேடு சாலைப் பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சியின் புதிய கட்டடத்தில் முதல்வர் மருந்தகத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட முதல்வர் மருந்தகம் எனப்படும் இந்தத் திட்டமானது 24.02.2025ல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்து கடைகள் மூலம் ஜெனரிக் வகை மருந்துகளைக் குறைந்த விலையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவருக்கும் தரமான மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் முதல்வர் மருந்தகங்களுக்கு 294 ஜெனரிக் மருந்துகளை கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாவட்டத்தில் 44 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவற்றுள் 9 மருந்தகங்கள் தொழில் முனைவோர்களும், 35 மருந்தகங்கள் கூட்டுறவு நிறுவனங்களாலும் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றுக்கு தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலமாக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திலிருந்து மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பப்பட்டு, அதன் மூலமாக முதல்வர் மருந்தகங்களுக்கு தேவைப் பட்டியலின்படி அனுப்பி வைக்கப்படுகிறது.

முதல்வர் மருந்தகத்தில் கொள்முதல் விலையிலிருந்து 25% தள்ளுபடியில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதால், மக்கள் மருந்தகத்தை விட விலை மிகவும் குறைவாக இருக்கிறது.

முதல்வர் மருந்தகத்தில் தனியார் மருந்துக் கடைகளை விட 75% வரை விலை குறைவாகக் கிடைக்கிறது.

வ.எண் மருந்தின் பெயர் தனியார் முதல்வர் மருந்தகம்

1 PARACETAMOL 500 MG Rs.10.00 Rs.4.73

2 CETIRIZINE 10 MG Rs.15.00 Rs.3.71

3 DICLOFENAC 50 MG Rs.23.00 Rs.3.71

4 GLIBENCLAMIDE 5 MG Rs.17.66 Rs.3.71

5 METFORMIN 50 MG Rs.26.00 Rs.4.45

6 ATORVASTALIN 10 MG Rs.55.32 Rs.5.94

7 CLOPIDOGREL 75 MG Rs.74.48 Rs.11.78

8 ENALAPRIL 5 MG Rs.41.44 Rs.3.71

9 AMLODIPINE 5 MG Rs.28.00 Rs.3.71

10 PANTOPRAZOLE 40 MG Rs.100.00 Rs.8.16

இன்சுலின் மருந்துகள் சந்தை மதிப்பை விட மிகக் குறைந்த விலையில் முதல்வர் மருந்தகத்தில் கிடைக்கிறது.

வ.எண் மருந்தின் பெயர் Brand Name விலை நமது விலை

1 BI PHASIC ISOPHENE 30/70 INJ 40IU XSULIN 30/70 INJ Rs.178.29 Rs.89/-

2 BI PHASIC ISOPHENE 50/50 INJ 40IU XSULIN 50/50 INJ Rs.178.29 Rs.87/-

3 BI PHASIC ISOPHENE 30/70 INJ 40IU 100IU CATRIDGE EQUISULIN 30/70 CATRIDGE Rs.293.57 Rs.164/-

இவ்வாறாக திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த முதல்வர் கூட்டுறவு மருந்தகம், பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டுறவு பண்டகசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த முதல்வர் மருந்தகம் ரூ.12 லட்சத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் கட்டப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயரால் இன்று (08.10.2025) திறந்து வைக்கப்பட்டது. மேலும், மற்ற மருந்தகங்களை விட குறைந்த அளவில் அனைத்து விதமான ஜெனரிக் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் முதல்வர் மருந்தகத்தினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story