முதுமலை புலிகள் காப்பகம் வரும் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை மூடப்படும் - காப்பக நிர்வாகம் அறிவிப்பு

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படுவதாக காப்பக நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம் வரும் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை மூடப்படும் - காப்பக நிர்வாகம் அறிவிப்பு
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.

இதற்கிடையில் வருகிற 9-ந் தேதி புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர், தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடுக்கு வருகை தர உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் டெல்லியில் அறிவித்தார். அப்போது பாகன் தம்பதி பொம்மன், பெள்ளியை சந்திப்பார் எனவும் தெரிவித்தார். பின்னர் கேரளாவில் உள்ள வயநாடு சரணாலயத்துக்கு செல்கிறார்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகம் வரும் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக புலிகள் காப்பகம் மூடப்படுவதாக காப்பக நிர்வாகம் அறிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com