முகூர்த்த நாள், வார விடுமுறை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள்

கோப்புப்படம்
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று (வெள்ளிக்கிழமை) முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். எனவே, தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 365 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 445 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து இன்று மற்றும் நாளை திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 120 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல, பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களுக்கும் 200 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மாதாவரத்திலிருந்து இன்று மற்றும் நாளை 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், வருகிற ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, இன்று (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய 9 ஆயிரத்து 164 பயணிகளும், நாளை (சனிக்கிழமை) பயணம் செய்ய 8 ஆயிரத்து 575 பயணிகளும், வருகிற 26-ந்தேதி பயணம் மேற்கொள்ள 16 ஆயிரத்து 108 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணித்து கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சூரசம்ஹாரம்: திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்
திருச்செந்தூரில் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ள சூரசம்ஹாரத்தையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து வருகிற 26-ந்தேதி திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
திருச்செந்தூரில் இருந்து வருகிற 27-ந்தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






