

மதுரை,
மதுரை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் ரூ.1,200 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணி குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-
கடந்த 2016-ம் ஆண்டு நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது முல்லை பெரியாறு பாசன பகுதியில் தண்ணீர் திருட்டு தொடர்பாக ஆய்வு செய்தேன், ஆய்வில் முறைகேடாக தண்ணீர் திருடப்பட்டது என தெரியவந்தது. இதுகுறித்து அப்போதைய முதல்-அமைச்சருக்கு(ஜெயலலிதா) கடிதம் எழுதினேன்.
தற்போது தண்ணீர் திருட்டை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார், அதன் அடிப்படையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆயக்கட்டு பகுதிகளில் 527 இடங்களிலும் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது. அதிவேக மின் மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. தண்ணீர் திருட்டால் ஒரு நாளுக்கு ரூ.30 லட்சம் அளவிற்கு மின்துறைக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் 5 மாவட்ட விவாசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
வெளிப்படை தன்மையுடன் தண்ணீர் திருட்டு தொடர்பாக முழுமையான விசாரனை நடத்தப்படும். தண்ணீர் திருட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.1,295 கோடி செலவில் முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு வரும் அம்ரூத் திட்டம் 2023-ம் ஆண்டு மே மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். முல்லை பெரியாறு ஆய கட்டு பகுதிகளில் தண்ணீர் திருட்டு, மின்சார திருட்டுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தண்ணீர், மின்சாரம் திருட்டுகளால் நிதித்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.