குரும்பூர் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி: வங்கிக்கு பூட்டு போட்டு மக்கள் தர்ணா போராட்டம்

நகை மற்றும் பணத்தை மீட்டுத்தர இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று குரும்பூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.
குரும்பூர் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி: வங்கிக்கு பூட்டு போட்டு மக்கள் தர்ணா போராட்டம்
Published on

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில், 5 ஆண்டுகளாகியும் தீர்வு கிடைக்காததால் ஆவேசமடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வங்கிக்குப் பூட்டுப் போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 2021 செப்டம்பர் 8ம் தேதி மற்றும் 13ம் தேதி நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டபோது 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானது தெரியவந்தது. மாயமான நகைகள் இருப்பில் இல்லை என்றும், இருப்பில் இருப்பது போன்று போலியாக கணக்கை உருவாக்கி ரூ.2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 வரை மோசடி செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மோசடி நடந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணமோ, நகையோ மீட்டு தரவில்லை என்றும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று காலை வங்கியை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தொடர்ந்து வங்கிக்கு வந்த செயலாளர் சீனிவாசனையும் அவர்கள் உள்ளே அனுமதிக்காமல் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த குரும்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகராஜ், மும்முது ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் வந்து எங்களுக்கு எங்கள் நகை மற்றும் பணம் எப்போது கிடைக்கும் என்று தெரிவிக்கும் வரை நாங்கள் இங்குதான் இருப்போம் என்று வங்கி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக நகை மற்றும் பணத்தை இழந்து தவித்து வருகிறோம். இதனால் எங்கள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது. இதை நினைத்து நாங்கள் தினமும் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் தி.மு.க. அரசோ எங்கள் பிரச்சினைக்கு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. கலெக்டரிடம் சென்று முறையிட்டால் அவரும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டார். தேர்தல் வரும் நேரத்திலாவது தி.மு.க. அரசு எங்கள் நகை மற்றும் பணத்தை மீட்டு தரும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வங்கி முன்பு தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் குரும்பூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துணை பதிவாளர் வந்து இன்று எங்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வு கூறினால்தான் இந்த இடத்தைவிட்டு செல்வோம். அது வரை நாங்கள் இங்கிருந்து செல்லப்போவதில்லை என்று கூறினார். இதனைத்தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு பின் திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் குமாரி கிரிஜா வங்கிக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

மேலும் உங்கள் நகை மற்றும் பணம் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார். ஆனால் அதனை ஏற்காத பாதிக்கப்பட்டவர்கள் எப்போது எங்களுக்கு தீர்வு கிடைக்கிறதோ அன்று இந்த வங்கியை திறந்தால்போதும் என்றனர். அதற்கு பதிலளித்த துணைப்பதிவாளர் குமாரி கிரிஜா, எங்கள் தரப்பிலிருந்து அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை வங்கி பூட்டியே இருக்கட்டும் என்று கூறிவிட்டு சென்றார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com