அண்ணா மேம்பாலத்தில் விபத்தில் சிக்கிய மாநகர பஸ் - சுவரை உடைத்து போலீசார் மீட்டனர்

சென்னை அண்ணா மேம்பாலத்தில் விபத்தில் சிக்கிய மாநகர பஸ்சை சுவரை உடைத்து போலீசார் மீட்டனர்.
அண்ணா மேம்பாலத்தில் விபத்தில் சிக்கிய மாநகர பஸ் - சுவரை உடைத்து போலீசார் மீட்டனர்
Published on

சென்னை, 

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி 25 ஜி வழித்தட மாநகர பஸ் நேற்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த பஸ் அண்ணா மேம்பாலத்தில் ஏறி நுங்கம்பாக்கம் பகுதியை நோக்கி திரும்பியபோது பக்கவாட்டு சுவரில் மோதியது. அந்த சாலை குறுகியது என்பதால் பஸ் பின் நோக்கி செல்ல முடியாமல் சிக்கியது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இந்த வழியாக தான் முதல்-அமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்லும்.

இந்த விபத்து நடந்த நேரத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் நோக்கி வந்து கொண்டிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கிய மாநகர பஸ்சை பின்நோக்கி எடுக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் பஸ் பக்கவாட்டு சுவரில் சிக்கி நங்கூரம் போன்று நின்றதால் பாலத்தின் சுவரை உடைத்து பஸ்சை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. விபத்தில் சிக்கிய பஸ் மீட்கப்பட்டது. இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் சீரானது. முதல்-அமைச்சரின் கான்வாய் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் கடந்து சென்றது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த விபத்தில் மாநகர பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. கண்டக்டர், நடத்துனர் லேசான காயம் அடைந்தனர். பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சமீபத்தில் பொன் விழா ஆண்டை கொண்டாடிய அண்ணா மேம்பாலத்தின் சுவரை உடைத்து பஸ்சை மீட்டது விமர்சனங்களுக்கும் உள்ளாகி உள்ளது.

அண்ணா மேம்பாலத்தில் இருந்து நுங்கம்பாக்கம் நோக்கி செல்லும் வளைவில் இந்த மாநகர பஸ் வேகமாக திரும்பியதால் தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

எனவே இந்த சாலையில் திரும்பும் போது வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இப்பகுதியில் ஏற்கனவே இதுபோன்ற விபத்துகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com