மெரினா கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மெரினா கடற்கரைக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர்.
மெரினா கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி, மெரினா கடற்கரைப் பகுதியில் தேவையான மின் விளக்குகள் அமைத்தல், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், மெரினா கடற்கரைப் பகுதியில் தேவையான மின்விளக்குகள் அமைத்தல், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.அமல்ராஜ் இன்று (08.06.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மெரினா கடற்கரைப் பகுதிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். எனவே, இப்பகுதிக்கு வருகை தரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற வகையில் நீலக்கொடி கடற்கரைப் பகுதிகள் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் தேவையான இடங்களில் மின்விளக்குகள் அமைத்தல், கண்காணிப்புக் கேமரா பொருத்துதல், மக்களுக்கு அறிவிப்புகளை வெளியிட்டு ஒழுங்குபடுத்துதல், அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு, மக்களுக்கு முழுபாதுகாப்பை உறுதிப்படுத்திடும் வகையில் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

இந்த ஆய்வின்போது, மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், காவல் கூடுதல் ஆணையாளர்கள் க.ந.நரேந்திர நாயர், (தெற்கு வட்டாரம்), ச.கார்த்திகேயன் (போக்குவரத்து), காவல் இணை ஆணையாளர் (தெற்கு) பி.விஜயகுமார், மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் வி.கார்த்திக், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com