

சென்னை,
சென்னை திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பெராகா சாலையில் (Beraka Road) தூய்மைப்பணி மேற்கொண்டிருந்த பொழுது தரையில் கண்டெடுத்த 3 சவரன் தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள் கார்த்திகா மற்றும் கலைச்செல்வி ஆகியோர்களின் நேர்மையினைப் பாராட்டி அவர்கள் இருவருக்கும், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தூய்மைப் பணியாளர்கள் கார்த்திகா மற்றும் கலைச்செல்வி ஆகியோர் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பெராகா சாலையில் (Beraka Road) 26.06.2026 அன்று காலையில் தூய்மைப்பணி மேற்கொண்டிருந்த தேவாலயம் அருகில், 3 சவரன் தங்கச் சங்கிலி தரையில் கிடந்ததை கண்டெடுத்து மேற்பார்வையாளர் உதவியுடன் அயனாவரம் ஜி5 காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், ரிப்பன் கட்டட அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் இந்த நேர்மையான செயலினைப் பாராட்டி, தூய்மைப் பணியாளர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்வில் ராம்கி நிறுவனத்தின் செயல்பாட்டுத்துறை அலுவலர் ரவி, திட்டத்தலைவர் பரிசுத்தம் வேதமுத்து மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.