காஷ்மீர் பிரச்சினையில் தி.மு.க.வும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுகின்றன முரளிதரராவ் குற்றச்சாட்டு

காஷ்மீர் பிரச்சினையில் தி.மு.க.வும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுகின்றன என்று முரளிதரராவ் கூறினார்.
காஷ்மீர் பிரச்சினையில் தி.மு.க.வும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுகின்றன முரளிதரராவ் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

ஒரே நாடு, ஒரே சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.க. ஒவ்வொரு மாநிலத்திலும் தேச ஒற்றுமை பிரசார இயக்கம் தொடங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சிறப்பு பயிலரங்கம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார். தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், தேசிய செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இரட்டை வேடம்

கூட்டத்தில் முரளிதரராவ் பேசும்போது, காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கனவான ஒரே நாடு, ஒரே சட்டம் நனவாகி உள்ளது. இந்த முடிவை மக்களிடம் எடுத்துரைக்க தேச ஒற்றுமை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியில் பங்கு பெற்ற அனைவரும் மக்கள் மத்தியில், அரசின் நல்ல நடவடிக்கையை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து முரளிதரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:

காஷ்மீர் பிரச்சினையில் தி.மு.க.வும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுகின்றன. இதை மக்கள் நன்றாக புரிந்து வைத்து இருக்கிறார்கள். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து நாங்கள் நாட்டு மக்களுக்கு விளக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உயர்மட்ட குழு கூட்டம்

இந்த கூட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக, பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டவர்கள் முரளிதரராவ் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com