தூத்துக்குடியில் கொத்தனார் படுகொலை: அண்ணன், தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் கொத்தனார் ஒருவரின் சித்தப்பாவை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தனர்.
ஆயுள் தண்டனை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் முருகேசன் (வயது 40) என்பவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முருகேசனின் சித்தப்பாவை மாரிசாமி மற்றும் அவரது நண்பர்கள் கொலை செய்ததாக வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் அவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தன் சித்தப்பாவின் கொலைக்குக்கு பழிவாங்க சரியான தருணத்திற்காக காத்திருந்தார்.

கொத்தனார் படுகொலை:

முத்தையாபுரம் ராஜீவ்நகர் பகுதியில் கடந்த 14.10.2018 அன்று தசரா திருவிழா நடைபெற்ற போது மாரிசாமியை, முருகேசன் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மாரிசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பித்து, முருகேசனை பின்தொடர்ந்து துரத்தினர். ராஜீவ்நகர் 7-வது தெருவில் வைத்து முருகேசனை வளைத்து பிடித்து அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டியும், கற்களால் தாக்கியும் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்தனர்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை:

இந்த கொலை சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தின் அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு வழக்குப்பதிவு செய்தார். போலீஸ் இன்ஸ்பெகடர் சிவசெந்தில்குமார் விசாரித்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இவ்வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

கொத்தனார் முருகேசனை கொலை செய்த குற்றத்திற்காக, இவ்வழக்கின் முதன்மை குற்றவாளிகளான முத்தையாபுரத்தைச் சேர்ந்த உப்பளத் தொழிலாளர்கள் மாரிசாமி(44), அவரது சகோதரர் சரவணன்(35) மற்றும் இவர்களது கூட்டாளியான மூக்காண்டி(39) ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தாண்டவம் உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com