

கோவை,
கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிறுமியை கடத்திச்சென்றதாக கூறப்பட்டது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சூலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையே சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த சிறுமியின் உடலை மீட்டனர்.
தகவல் அறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யாபாரதி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த சிறுமி தான் காணாமல் போனவர் என்பதும், அவரை 2 பேர் கடத்திச்சென்று கொலை செய்து உடலை முட்புதரில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. போலீசார் அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சிறுமி கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், புதிய அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
கோவை - சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடரும் வன்முறைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.