காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை: கொலையாளிகள் 3 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

காதலிக்க மறுத்ததால் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை: கொலையாளிகள் 3 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதலிக்க மறுத்த காரணத்திற்காக இளம்பெண் சரஸ்வதி நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நாடகக் காதல் கும்பலின் இத்தகைய அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதும், அடங்க மறுப்பதும் கண்டிக்கத்தக்கவை. இவை சமூக அமைதியை குலைக்கக்கூடியவை.

காதலிக்கவும், திருமணம் செய்யவும் மறுத்ததற்காக ஒரு பெண்ணை படுகொலை செய்வதைவிட மோசமான காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியாது. தமிழ் சமூகம் பெண்மையை கடவுளாக வணங்கக் கூடியதாகும். கண்ணகி, திரவுபதி, ஆண்டாள் ஆகியோரை நாம் கடவுளாக போற்றி வணங்கி வருகிறோம். இத்தகைய சமூகத்தில் பிறந்த எவரும் காதலிக்க மறுத்ததற்காக ஒரு பெண்ணை படுகொலை செய்ய துணிய மாட்டார்கள். இத்தகைய செயல்கள் சமூக நல்லிணக்கத்தை குலைத்து விடக் கூடியவை.

சரஸ்வதியை படுகொலை செய்தவர்களும் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான். இவர்கள் அந்தப் பகுதியில் வேறு பல சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சட்டப்படியாக அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.

அதற்கேற்ப கைதான ரங்கசாமி உள்ளிட்ட மூவர் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவும் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com