ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் வெட்டிக்கொலை

வேடசந்தூர் அருகே, ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சாக்குமூட்டையில் கட்டி உடலை வீசிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் வெட்டிக்கொலை
Published on

கணவரை பிரிந்த பெண்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கீழதிப்பம்பட்டியை சேர்ந்தவர் அகில்ராஜ். அவருடைய மனைவி பாண்டீஸ்வரி (வயது 27). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அகில்ராஜை பிரிந்து, பாண்டீஸ்வரி மட்டும் திண்டுக்கல்லில் தனியாக வசித்து வந்தார். அவருடைய 2 குழந்தைகளும் அகில்ராஜுடம் வசிக்கின்றனர்.

கள்ளத்தொடர்பு

தாடிக்கொம்பு அருக உள்ள சேடப்பட்டியை சேர்ந்தவர் கவுஸ்பாண்டி (25). இவருக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை. கவுஸ்பாண்டி, வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழில் செய்து வருகிறார். தனது தொழில் விஷயமாக இவர் அடிக்கடி திண்டுக்கல் வந்து சென்றார்.

அப்போது பாண்டீஸ்வரியை சந்தித்து பேசும் வாய்ப்பு கவுஸ்பாண்டிக்கு கிடைத்தது. இதில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்

இதற்கிடையே தன்னுடன் தொடர்பில் உள்ள கவுஸ்பாண்டியை மிரட்டி பணம் பறிக்க பாண்டீஸ்வரி திட்டமிட்டதாக தெரிகிறது. அதன்படி தனக்கு ரூ.10 லட்சம் தருமாறு அடிக்கடி கேட்டு பாண்டீஸ்வரி அவரை மிரட்டினார்.

இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கவுஸ்பாண்டி, பாண்டீஸ்வரியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதற்காக  சேடபட்டிக்கு வரும்படி பாண்டீஸ்வரியை கவுஸ்பாண்டி அழைத்தார்.

வெட்டிக்கொலை

கவுஸ்பாண்டியின் அழைப்பை ஏற்று பாண்டீஸ்வரி இரவில் சுக்காம்பட்டிக்கு பஸ்சில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து பாண்டீஸ்வரியை, சேடப்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் கவுஸ்பாண்டி அழைத்து சென்றார்.

சேடப்பட்டி செல்லும் வழியில் உள்ள காட்டுப்பகுதியில் அவர்கள் 2 பேரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. பின்னர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென பாண்டீஸ்வரியை சரமாரியாக கவுஸ்பாண்டி வெட்டினார்.

அவருடைய கழுத்து, கை மற்றும் முகத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் நிலைகுலைந்து போன பாண்டீஸ்வரி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சாக்குமூட்டையில் உடல்

இதற்கிடையே பாண்டீஸ்வரியின் உடலை, தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த சாக்குப்பையில் போட்டு கட்டினார். பின்னர் நள்ளிரவில், பாண்டீஸ்வரி உடலுடன் கூடிய சாக்குமூட்டையை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு தாடிக்கொம்பு-இடையகோட்டை சாலையில் கவுஸ்பாண்டி சென்றார்.

பூலாங்குளம் அருகே, சாலையோரத்தில் அந்த சாக்குமூட்டையை வீசி சென்று விட்டார். பாண்டீஸ்வரியை கொலை செய்த கவுஸ்பாண்டி செய்வதறியாது திகைத்தார். போலீசார் விசாரணை நடத்தி தன்னை எப்படியும் கைது செய்து விடுவார்கள் என்று அவர் கருதினார். இதனால் அவர், போலீசில் சரண் அடைய முடிவு செய்தார்.

போலீஸ் நிலையத்தில் சரண்

அதன்படி வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு கவுஸ்பாண்டி சென்றார். பாண்டீஸ்வரியை கொலை செய்ததாக கூறி, கவுஸ்பாண்டி அங்கு சரண் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் கவுஸ்பாண்டி கொடுத்த தகவலின் பேரில், பூலாங்குளம் பகுதிக்கு போலீசார் விரைந்தனர். அங்கு சாலையோரத்தில் சாக்குமூட்டை கிடந்தது. அதனை போலீசார் பிரித்து பார்த்தனர். அதற்குள் வெட்டுக்காயங்களுடன் கூடிய பாண்டீஸ்வரியின் உடல் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

கைது-வாக்குமூலம்

உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுஸ்பாண்டியை கைது செய்தனர்.

கைதான அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக எனக்கும், பாண்டீஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. எனக்கு அவர் ரூ.2 லட்சம் வரை தந்திருக்கிறார். இவ்வளவு நாள் அவருடன், நான் பழகியதற்காக ரூ.10 லட்சம் கேட்டு அவர் என்னை மிரட்டினார். இதனால் அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று, உல்லாசம் அனுபவித்து விட்டு அரிவாளால் வெட்டிக்கொன்றேன். பின்னர் உடலை மறைப்பதற்காக சாக்குமூட்டையில் கட்டி சாலையோரத்தில் வீசி சென்று விட்டேன். எப்படியும் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்று கருதி போலீசில் சரண் அடைந்தேன் என்று வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

வேடசந்தூர் அருகே,கள்ளக்காதலனால் பெண் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com