

மதுரை,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது பெண் தனது கணவருடன் திருப்பூர் சென்று வேலை பார்த்தார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு அவரது கணவர் இறந்து விட்டார். அந்த பெண் திருப்பூரிலேயே வேலை பார்த்து வந்தார். அப்போது ராஜ்குமார்(வயது 35) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இது அந்த பெண்ணின் 17 வயது மகனுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து தாயையும், ராஜ்குமாரையும் மகன் கண்டித்து வந்து உள்ளான். இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள தனது கணவர் வீட்டுக்கு அந்த பெண் வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக திருப்பூரில் இருந்து ராஜ்குமார் வந்துள்ளார். இது அந்த பெண்ணின் மகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து அந்த சிறுவன், ராஜ்குமாரை அழைத்து கொண்டு அந்த கிராம பகுதியில் மது அருந்தி உள்ளான். பின்னர் மது போதையில் இருந்த ராஜ்குமாரை பீர்பாட்டிலால் தாக்கி கழுத்தில் குத்தினான். பின்னர் அங்கு கிடந்த கல்லை தூக்கி ராஜ்குமார் தலையில் போட்டான். இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சிந்துப்பட்டி போலீசார், அந்த சிறுவனை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.