

சென்னை,
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வந்தார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி அதன் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். அவருக்கு துணையாக கணவர் மாதவன் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் கட்சிப் பணிகள் மற்றும் தொண்டர்களை சந்திப்பது தொடர்பாக தீபாவுக்கும் கணவர் மாதவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மாதவன் தீபாவின் வீட்டை விட்டு வெளியேறி வெளியில் தங்கினார். சில வாரங்களுக்கு முன்பு அவர்களிடையே கருத்து வேறுபாடு நீங்கியது. தீபாவின் வீட்டுக்கு மாதவன் திரும்பினார். பின்னர் இருவரும் இணைந்து கட்சிப் பணியாற்றினார்கள்.
இந்த நிலையில் தீபாவுக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இரவு 7 மணியளவில் தீபாவின் வீட்டுக்கு அவரது டிரைவர் ராஜா வந்தார். அப்போது அவருக்கும் தீபாவின் கணவர் மாதவனுக்கும் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக மாதவன் நேற்று இரவு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவர் கூறி இருப்ப தாவது:-
நான் தி.நகர் சிவஞானம் தெருவில் மனைவி தீபாவு டன் வசித்து வருகிறேன். கண்ணம்மா பேட்டை பஜனை கோவில் தெருவில் வசிக்கும் ராஜா என் மனைவியின் தம்பி தீபக்கின் நண்பர் ஆவார்.
ராஜா ஏற்கனவே எனது வீட்டுக்கு வந்த போது பாதுகாவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் வீட்டில் வேலை செய்யும் சுந்தர், சிவா, எனது நண்பர் சண்முகம் ஆகியோரை ராஜா தாக்கினார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் எனது வீட்டில் வேலை செய்யும் சுந்தர், சிவா, ஜெரோம் ஆகியோரிடம் ராஜா தகராறு செய்ததுடன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே என்னை ராஜாவிடம் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார். இந்த புகார் மனுவை விசாரித்த போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தீபா தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு 9 மணியளவில் மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் போலீஸ் நிலையத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், தனது கணவர் மாதவன் அளித்த புகாரில் உண்மை இல்லை. எனவே அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். ராஜாவால் எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி விளக்கம் அளித்தார்.
பின்னர் தீபா இரவு 10 மணியளவில் அவரது வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் அவரது வீட்டில் குவிந்தனர். ஆனால் தீபா பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. இரவு 10.30 மணியளவில் தீபாவும், டிரைவர் ராஜாவும் காரில் வீட்டை விட்டு வெளியே சென்றனர். இதனால் இன்று தீபாவின் வீடு பூட்டிக் கிடந்தது.