திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்: தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு - திருமாவளவன்

கோப்புப்படம்
திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது 4 சிறார்கள் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது 4 சிறார்கள் கஞ்சா போதையில் கொடூரமாக தாக்குதல் நடத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தின. இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை 'ரீல்ஸ்' என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






