

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதும், ஊத்தங்கரை அருகில் முதியவர் படுகொலை செய்யப்பட்டு அவரது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் திரும்பிய திசையெல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என அடுத்தடுத்து குற்றங்கள் நிகழ்வதும், அவற்றைத் தடுக்க வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்வதும் கண்டிக்கத்தக்கது.
திரிசூலம் துளசிலிங்க முதலியார் தெருவில் உள்ள ஆறுமுகம் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம், சந்தோஷ் ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளது. சுங்குவார் சத்திரத்தில் கடந்த ஆண்டு திமுக நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் தான் இந்த படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஓபகவலசை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்த கண்ணப்பன் என்ற 74 வயது முதியவரை கொலை செய்த கும்பல், அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. இந்த இரு நிகழ்வுகளிலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஆகாஷ் படுகொலை செய்யப்பட்ட பதட்டம் அடங்குவதற்கு முன்பாகவே முனீஸ்வரன் என்ற தானி ஓட்டுனர் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் அதன் தலைவரான சிவக்குமார் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என எந்தத் திசையில் பார்த்தாலும் கொலைகளும், கொள்ளைகளும் தான் நடந்து கொண்டிருக்கின்றன. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டன. கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற எந்தக் கொலையில் திடீரென உணர்ச்சிவசப்பட்டு செய்யப்பட்ட கொலைகள் அல்ல. அனைத்தும் திட்டமிட்டும், மது போதையிலும் செய்யப்பட்ட கொலைகள் தான். காவல்துறையினர் விழிப்புடன் இருந்திருந்தால் இந்தக் கொலைகளைத் தடுத்திருக்க முடியும். ஆனால், செயலற்ற திமுக அரசின் கீழ் செயல்படும் காவல்துறை இந்தக் கொலைகளை தடுக்க திறனில்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஒருபுறம் எங்கும் கொலைகள், எதிலும் கொலைகள் என தமிழ்நாடு வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறி வரும் நிலையில், இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் ஆளும் திமுக நாள்தோறும் விதவிதமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, ரோம் மாநகரம் தீப்பற்றி எரிந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் நவீன அவதாரமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவெடுத்திருக்கிறார். இப்படி ஒரு நிலை உருவாகியிருப்பது நிச்சயமாக தமிழ்நாட்டின் சாபக்கேடு தான்.
திமுக மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் கவலையாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தங்களின் கவலையை போக்கும் வகையிலான தீர்ப்பை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அளிப்பார்கள்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.