மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்கம்

திருப்பரங்குன்றம் மலை, கோவில் பின்னணியில் இருப்பது போன்று மாநாட்டுக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு இன்று நடக்கிறது. இதனையொட்டி, அங்குள்ள திடலில், அறுபடை வீடு முருகன் கோவில்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு, தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை, கோவில் பின்னணியில் இருப்பது போன்று இந்த மாநாட்டுக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேடையில் அறுபடை வீடுகளின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு நடுவில் முருகப்பெருமான் வேலுடன் நிற்கும் பிரமாண்ட சிலை போன்ற வடிவமைப்பும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. இருக்கைகள் அமைக்கப்பட்டு நேற்று அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றன. மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது முருக பக்தர்கள் மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பில் 5 லட்சம் பக்தர்கள் அமரும் வகையில் தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் அமர 1 லட்சம் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.






