திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்

கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். அவர் அம்மாவட்டத்தில் இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பின், நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள் என்றார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

தமிழ்நாட்டு சாதனைகள் வளர்ச்சியடைந்த இந்தியா என்றால் பாஜக ஆளும் மாநிலங்களில் வெறொரு இந்தியா உள்ளது. வறுமை, மதவன்முறை, கும்பல் படுகொலைகள், கல்வியை கெடுக்கும் முயற்சிகள், வேலைவாய்ப்பின்மை இதுதான் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தில் கூட மாற்றுத்தினறாளிகள், குழந்தைகளை தாக்கும் சூழ்நிலையை பாஜக அரசு உருவாக்கியுள்ளது. இதைத்தான் தமிழ்நாட்டிலும் கொண்டுவர பாஜக நினைக்கிறது. ஆனால், நம் மக்கள் உஷார்.

திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள். மதுரை சித்திரை திருவிழாவுக்கு வரக்கூடிய இந்து பக்தர்களுக்கு பள்ளிவாசல்களில் இஸ்லாமிய சகோதரர்கள் ரோஸ் மில்க் கொடுக்கின்றனர். தை முதல் நாளில் தேவாலங்களில் பொங்கல் வைத்து படைக்கிறார்கள். கிறிஸ்துமஸ், ரம்ஜான் வந்துவிட்டால் கேக், பிரியாணி எங்கே என்று இந்துக்கள் உரிமையாக கேக்கின்றனர்.

எம்மதமும் சம்மதம் என்கிற தமிழ்நாட்டு மக்களுடைய ஒற்றுமை, மத நல்லிணக்கம்தான் மதவாத அரசியல் செய்து மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜகவின் கண்களை உறுத்துகிறது. எத்தனை அடிமைகளை சேர்த்துக்கொண்டு பாஜக அந்தர்பல்டி அடித்தாலும் சரி ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டு மக்களிடம் மதவெறியை தூண்ட முடியாது’ என்றார்.

முன்னதாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், தீபத்தூண் அருகே தர்கா இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி தீபம் ஏற்ற தமிழக அரசு மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அதேவேளை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கடந்த 21ம் தேதி மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 6ம் தேதி சந்தனக்கூடும் திருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story