நெல்லை, மதுரையில் அருங்காட்சியகப்பணிகள் நிறைவு - 9-ந்தேதி திறக்க திட்டம்

நெல்லையில் நவீன வசதிகளோடு பொருணை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.
மதுரை,
தமிழகத்தின் பண்டைய காலத்தில் சிறந்தோங்கி விளங்கிய ஆற்றங்கரை நாகரிகங்களில் ஒன்றனா பொருணை ஆற்றங்கரையின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய தொல்பொருட்களை அழகுற காட்சிப்படுத்தும் விதமாக ரூ.33.02 கோடி மதிப்பில் நெல்லையில் நவீன வசதிகளோடு பொருணை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள 13.02 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.33.02 கோடியில் பொருணை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், மனித நாகரிகம் தோன்றிய பொருணை ஆற்றங்கரைப் பகுதிகளை பெருமைப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வரலாற்றுப் பொருட்களைக் காட்சிப்படுத்தி, தற்போதைய சமூகத்தினர் பயன்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, பொருணை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் `பொருணை' அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
இங்கு ஆதிச்சநல்லூர் காட்சிக் கூடம், சிவகளை காட்சிக் கூடம், கொற்கை காட்சிக் கூடம் என 3 வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிற்றுண்டி சாலைகள், வாகன நிறுத்தம், ஆகியவைகளும் இடம் பெற்றுள்ளன. இப்பகுதி பொதுமக்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும். மனித நாகரிகத்தின் தொட்டில் என்ற பெருமை நெல்லைக்கு கிடைத்துள்ளது.
மதுரை காந்தி அரங்காட்சியகம் (மியூசியம்) ரூ.10.25 கோடி மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக புனரமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக பாரம்பரிய முறைப்படி கடுக்காய், சுண்ணாம்பு, வெல்லம் கலந்த கலவை மூலம் அரண்மனையின் முதல் தளத்தில் உள்ள சதுரத்தூண்களுடன் கூடிய தர்பார் பகுதி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் பழைய போட்டோக்கள் பொருத்தும் பணி, தர்பார் ஹாலில் டிஜிட்டல் பலகையில் தொட்டால் அடுத்தடுத்த காட்சிகளை பார்க்கும் வகையில் இந்திய விடுதலை வரலாறு குறித்த பதிவுகள் இடம்பெற உள்ளன. 2-வது மாடியில் உள்ள ஏ.வி.அரங்கில் காந்தி வரலாறு குறித்த ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. இதில் 100 பேர் அமரலாம். 2-வது மாடி வரை புதிதாக லிப்ட் அமைக்கும் பணியும் முடிந்துள்ளது.
தற்போது காந்தி அஸ்தி உள்ள பகுதி அருகே சிறிய குடிலில் காந்தியின் ரத்தக்கறை படிந்த வேட்டி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நெல்லையில் புதிதாக கட்டப்படும் பொருணை அருங்காட்சியகம் மற்றும் மதுரை காந்தி அருங்காட்சியகமும் பணிகள் நிறைவடைந்த நிலையில் வருகிற 9-ந்தேதி முதல்-அமைச்சர் மூலம் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.






