

மதுரை
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், இஸ்லாமியர்கள் குவிந்தது கவனம் பெற்றுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. மேலும், அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தற்போதைய த.வெ.க. அரசும், கடந்த தி.மு.க. அரசின் நிலைப்பாடான தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளது.
அதேவேளையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் நவம்பர் 24-ந்தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று ஒருமுறை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதையடுத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்டது. மேலும், திருப்பரங்குன்றம் மலை முழுவதும் சி.ஆர்.பி.எப். படையின் கட்டுப்பாடிற்குள் கொண்டுவர உத்தரவிட்டது. மலையில் உள்ள தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையிலான குழு தீபம் ஏற்றும் நேரத்தை முடிவு செய்ய சுப்ரீம் கோட்டு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை தீபம் ஏற்றப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.
தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதல் முருக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அய்யப்ப பக்தர்களும் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு செல்வதற்காக, கேரளம் மாநிலத்தில் இருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மலையடிவாரத்தில் குவிந்தனர். மலையில் உள்ள தர்காவில் இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என வந்துள்ள அவர்களது ஆதார் அடையாள அட்டைகளை சரிபார்த்த பிறகு, காவல் துறையினர் மலை மீது செல்ல அனுமதித்து வருகின்றனர். இன்று மலை உச்சியில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், அதிகாலையிலேயே இத்தனை பேர் தர்காவுக்கு செல்ல குவிந்திருப்பது அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.