பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
Published on

பக்ரீத் பண்டிகை

தமிழகம் முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் புத்தாடைகள் அணிந்து தங்களது வீடுகளில் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்கள் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகரில் பள்ளி வாசல்கள் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி டவுன் முதல் அக்ரஹாரத்தில் உள்ள ஜாமியா மஜீத் பள்ளி வாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பின்னர் தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

சிறப்பு தொழுகை

இதேபோல் சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் திறந்த மைதானத்தில் நேற்று ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். சிலர் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தனர்.

தொடர்ந்து கோட்டை மஜீத், செவ்வாய்பேட்டை, கோரிமேடு, சன்னியாசிகுண்டு, பொன்னம்மாபேட்டை, ஜாகீர் அம்மாபாளையம், சூரமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடு போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை 3 சம பங்குளாக பிரித்து வைப்பதும், அவற்றில் ஒரு பங்கை உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழை மக்களுக்கும் (குர்பானி) கொடுத்துவிட்டு 3-வது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துவார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

அதன்படி, பக்ரீத் பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள முஸ்லிம் வீடுகளில் நேற்று பிரியாணி சமைத்து அதனை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். பக்ரீத் தொழுகையையொட்டி பள்ளிவாசல்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com