அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்; பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்; பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் சமீப காலங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. ஊரடங்கு தளர்வுகளும் அரசால் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த நிலையில், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுபற்றி பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக வணிக வளாகங்கள், அங்காடிகள் உட்பட பல்வேறு பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரைசல் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்தி கொள்ளுதல் போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்குள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் வணிக வளாகங்கள், அங்காடிகள் உட்பட பல்வேறு பொது இடங்களுக்கு செல்லும் போதும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் கட்டாயம் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

நிகழ்ச்சிகளில் உணவு அருந்தும்போது சமூக இடைவெளியுடன் அமர வேண்டும். மேலும், மண்டப உரிமையாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com