தமிழகம் முழுவதும் ஆட்டுக்கறி, கோழிக்கறி விலை உயர்வு; அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

சென்னையில் வழக்கமாக கிலோ ரூ.900 முதல் ரூ.1,000 வரை விற்கப்பட்ட ஆட்டுக்கறி தற்போது கிலோ ரூ.1,200 வரை உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆட்டுக்கறி, கோழிக்கறி விலை உயர்வு; அசைவ பிரியர்கள் அதிர்ச்சி
ஆட்டுக்கறி, கோழிக்கறி விலை உயர்வு
Published on: 

சென்னை,

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், இறைச்சியின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆட்டுக்கறி, கோழிக்கறி விலை கடந்த ஒரு வாரத்தில் அதிகரிக்க தொடங்கி விட்டன.

ஆட்டுக்கறி விலை உயர்வு

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் வழக்கமாக கிலோ ரூ.900 முதல் ரூ.1,000 வரை விற்கப்பட்ட ஆட்டுக்கறி (மட்டன்) தற்போது கிலோ ரூ.1,200 வரை உயர்ந்துள்ளது.

புளியந்தோப்பு

புளியந்தோப்பு ஆட்டு தொட்டியில் இறைச்சி கிலோ ரூ.720, ரூ.750 வரை கடந்த 2 மாதம் முன்பு வரை விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ.850-க்கு விற்கிறார்கள். அதனை வாங்கி சிறு வியாபாரிகள் ரூ.1000-க்கு விற்பனை வருகின்றனர். ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும். இந்த பகுதியில் இதற்கு மேல் வைத்தால் விற்பனையாகாது.

ஆட்டின் விலை உயர்வு காரணமாக அதன் இதர பாகங்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது:

• தலைக்கறி: ரூ.600

• ஆட்டு கால்கள் (4): ரூ.400

• மண்ணீரல்: ரூ.300

• ஈரல்: ரூ.800 முதல் ரூ.1,000 வரை

கோழிக்கறி தட்டுப்பாடு

இந்த விலை உயர்வுக் கான காரணம் குறித்து சென்னை கோழி மொத்த விற்பனையாளர் சங்க செயலாளர் ஞான செல்வம் கூறியதாவது:-

புரட்டாசி முடிந்து ஐப்பசி தொடங்கி இருப்பதால் கோழிக்கறி பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் விலை உயர்கிறது. கோழி உற்பத்தி குறைக்கப்பட்டு இருப்பதால் தேவையான அளவு கிடைப்பதில்லை. உற்பத்தி செலவு அதிகரிப்பதால் கோழி பண்ணையாளர்கள் உற்பத்தியை குறைத்து வருகின்றனர். கறிக்கோழி தட்டுப்பாடு இருப்பதால் சிலர் பதுக்கி இருப்பு வைக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. இதனாலும் கோழிக்கறி விலை உயர்கிறது.

ரூ.340 முதல் ரூ.360 வரை உயர்வு

இதேபோல், கடந்த வாரம் வரை கிலோ ரூ.280 முதல் ரூ.300 வரை விற்கப்பட்ட கோழிக்கறி தற்போது ரூ.340 முதல் ரூ.360 வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி தேவை ஒருபுறமிருக்க, கறிக்கோழி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வால் பண்ணையாளர்கள் உற்பத்தியை குறைத்துள்ளனர்.

மாலை நேரத்தில் கிடைப்பதில்லை

இதனால் சென்னைக்கு வரும் கோழிகளின் வரத்து குறைந்து, கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காலை முதல் இரவு வரை தாராளமாகக் கிடைத்து வந்த கோழிக்கறி, தற்போது மாலை நேரங்களிலேயே தீர்ந்து விடுகிறது. இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி சிலர் கோழிகளைப் பதுக்கி வைப்பதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ரூ.5 வரை விலை உயர வாய்ப்பு

உயிருடன் விற்கப்படும் கறிக்கோழியின் விலை தற்போது கிலோ ரூ.162 ஆக இருக்கும் நிலையில், தீபாவளிக்குள் மேலும் ரூ.5 வரை விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். வெளிமாநில ஆடுகளின் வரத்து குறைவு மற்றும் கோழி உற்பத்தி சரிவு ஆகியவற்றால் இந்த தீபாவளிக்கு அசைவ விருந்து நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையாக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com