என் குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை ஏற்படுத்தினால் சட்ட விளைவை சந்திக்க வேண்டிவரும்- விவேக் ஜெயராமன்

என் பெயரை சொல்லி என் குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும், அதற்கான சட்ட விளைவை சந்திக்க வேண்டிவரும் என விவேக் ஜெயராமன் கூறி உள்ளார். #VivekJayaraman
என் குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை ஏற்படுத்தினால் சட்ட விளைவை சந்திக்க வேண்டிவரும்- விவேக் ஜெயராமன்
Published on

சென்னை

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களை சேர்க்க 15 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டதில் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு மாணவர்களை சேர்த்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி, பேராசிரியர் சர்வானி, பதிவாளர் வி.பாலாஜி, துணை பதிவாளர் அசோக்குமார், இணை பேராசிரியர் ஜெய்சங்கர், நிர்வாக அதிகாரி ராஜேஷ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 2016-17-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது தான் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

அப்போது வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் உரிய இட ஒதுக்கீட்டின்கீழ் சட்ட படிப்புகளில் மொத்தம் 93 பேர் சேர்க்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 18 பேரின் சேர்க்கை தான் முறையாக நடந்ததாக தெரியவந்துள்ளது. மீதமுள்ள 75 மாணவர்கள் சேர்க்கையில் லஞ்சம் கைமாறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாடு வாழ் இந்திய மாணவர் சேர்க்கையில் விவேக் ஜெயராமனும் (சசிகலா உறவினர் இளவரசியின் மகன்) எல்.எல்.பி. சட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். இவரது சேர்க்கையிலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

அவர் முறையான சான்றிதழ் எதுவும் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விரைவில் விவேக்கிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் என் மீது தவறு இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுங்கள் - சட்டப் பல்கலை.யில் முறைகேடாக சேர்ந்த குற்றச்சாட்டு குறித்து விவேக் ஜெயராமன் விளக்கம் அளித்து உள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து விவேக் ஜெயராமன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியதாவது:-

என் மீது தவறு இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுங்கள். என் பெயரை சொல்லி என் குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும், அதற்கான சட்ட விளைவை சந்திக்க வேண்டிவரும் .

எனது சகோதரி மூலம் வெளிநாடு வாழ் இந்தியர் என்ற பிரிவில் முறையான சான்றிதழ் சமர்பித்தே கல்லூரியில் சேர்ந்தேன். இப்போதும் அது சம்பந்தமான சான்றிதழ்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளேன்.

நான் முறைகேடாக கல்லூரியில் சேர்ந்ததாக உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புவது நியாயமற்றது; உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறி இருந்தால் கல்லூரியில் எனக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கும். என அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com