

சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப மகளிருக்கான சமத்துவம் மற்றும் சம உரிமை வழங்கப்படுவதன் அவசியத்தை உணர்த்தும் இந்த நாளில் அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்மையைப் போற்றி கொண்டாடும் இந்நாளில் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தாயின் முதலெழுத்தைக் குழந்தையின் தலைப்பெழுத்தாக பயன்படுத்துதல் என மகளிர் நலன் பயக்கும் நல்ல பல திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாகச் செயல்படுத்தி பெண் இனத்தின் பெருமையாகத் திகழும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை நினைவில் கொள்வோம்.
தாயாக, சேயாக, தமக்கையாக, தாரமாக என அனைத்திலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சம உரிமையோடு, அவர்களுக்கான பாதுகாப்பு முழுமையாக கிடைத்திடுவதையும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதி செய்திடுவோம்.
மகளிரின் அர்ப்பணிப்பு உணர்வை உலகிற்கு உணர்த்தும் இந்நாளில், தடைகளைத் தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையை ஏற்படுத்திட, அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு அடைந்திட அனைத்து மகளிருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.