

சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும், விநாயகபுரத்தை சேர்ந்த 22 வயது வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் தெரிந்த சிறுமியின் பெற்றோர், அவரை கண்டித்ததுடன், அந்த வாலிபரை காதலிக்கக்கூடாது என்றும், வேறு இடத்தில் விரைவில் திருமணம் செய்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமி தனது காதலனிடம் கூறிய நிலையில், மனமுடைந்த அந்த வாலிபர் சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, சிறுமி செல்போன் பயன்படுத்தக்கூடாது, வெளியே செல்லக்கூடாது என பெற்றோர் கட்டுப்பாடு விதித்ததாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சிறுமி, நேற்று விஷம் குடித்து விட்டு நேரடியாக ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், தனது பெற்றோர் துன்புறுத்துவதாகவும், அக்காள் கணவர் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஷம் குடித்ததாகவும் சிறுமி தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக சிறுமியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதையடுத்து, சிறுமியின் புகாரின் பேரில், ராசிபுரம் தாலுகா சீராப்பள்ளியை சேர்ந்த அவரது அக்காள் கணவர் சதாசிவம் மீது அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.