

சென்னை,
மயிலாப்பூரில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் வீட்டில், 15 வருடங்களாக வேலை செய்து வந்த பெண் ஒருவர் 54 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மா. ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரியான இவரது வீட்டில், மணிமேகலை (வயது 53) என்ற பெண் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். நீண்ட காலமாக வேலை செய்து வந்ததால், மணிமேகலை மீது பத்மாவின் குடும்பத்தினருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பத்மாவின் வீட்டில் இருந்த 54 சவரன் தங்க நகைகளும், ரூ.15 லட்சம் ரொக்கப் பணமும் மர்மமான முறையில் கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து பத்மா அளித்த புகாரின் பேரில், மயிலாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் வேலை செய்யும் மணிமேகலையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர்தான் இந்த திருட்டை அரங்கேற்றினார் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மணிமேகலை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது கணவரின் மருத்துவச் செலவு மற்றும் குடும்ப சூழ்நிலைக்காக பலரிடம் சுமார் 24 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருந்ததாக தெரிவித்துள்ளார். வாங்கிய கடனைத் திருப்பித் தருமாறு கடன் கொடுத்தவர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.
இந்த பணப் பிரச்சினையிலிருந்தும், கடன் நெருக்கடியிலிருந்தும் தப்பிக்க வேறு வழி தெரியாமல், தான் இத்தனை வருடங்களாகப் பணியாற்றிய வீட்டிலேயே நகைகளையும் பணத்தையும் திருடியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல வருடங்களாக நம்பிக்கைக்குரியவராக இருந்த பெண் ஒருவரே, கடன் நெருக்கடி காரணமாக பெருந்தொகையைத் திருடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.