

சென்னை,
இன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி நொச்சிக்குப்பம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது, முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவின் தரம், சுவை, சுகாதாரம், ஊட்டச்சத்து, மற்றும் உணவு தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து, மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கருத்துக்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் கலந்துரையாடி, காலை உணவு திட்டத்தின் பயன்கள் மற்றும் பள்ளி வருகை, கற்றல் திறன் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், காலை உணவு திட்டம் தினந்தோறும் தரமாகவும், சுகாதாரமான முறையிலும், குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, பள்ளியின் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு, தூய்மை மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான கல்வி சூழலை தொடர்ந்து உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.