தூத்துக்குடி பள்ளி மாணவி மர்ம மரணம்: குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

இத்தகைய கொடூர சம்பவம் நிகழ்வதற்கு, காவலர்களின் அலட்சியப் போக்கே காரணம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
தூத்துக்குடி பள்ளி மாணவி மர்ம மரணம்: குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

 தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உட்பட்ட வேடநத்தம் கிராமத்தைச் சார்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி இயற்கை உபாதையை கழிக்க சென்றவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற தன் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன மாணவி சடலமாக கிடைத்துள்ளார். இந்த மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்து கடும் குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இத்தகைய கொடூர சம்பவம் நிகழ்வதற்கு, காவலர்களின் அலட்சியப் போக்கே காரணம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. பாலியல் வன்தாக்குதலால் மரணம் நிகழ்ந்துள்ளதா என்ற ஆழ்ந்த சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, குற்ற நிகழ்வின் உண்மையை கண்டறிய முறையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

கூலித் தொழிலாளி மகளின் மர்ம மரணம் குறித்த விசாரணையில் அலட்சியம் தொடர்ந்த நிலையில், கிராம மக்கள் அரசியல் கட்சியினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவியின் மர்மச் சாவில் காவல் துறையினர் முழு கவனத்துடன் செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com