திருவண்ணாமலை சிறையில் கைதி மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

திருவண்ணாமலை சிறைக் கைதி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று முதல்-அமைச்சரை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
திருவண்ணாமலை சிறையில் கைதி மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
Published on

சென்னை,

சமீபத்தில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்து, அவருடன் கைது செய்யப்பட்ட சுரேஷ் பலத்த காயமடைந்து அதற்கான விசாரணை ஆரம்பித்திருக்கின்ற நிலையில், மேலும் ஒரு விசாரணை கைதி திருவண்ணாமலை கிளைச் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தமிழ்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது நல்ல உடல்நலத்துடன் இருந்துள்ளார். அதற்கு அடுத்த நாளே உயிரிழக்கிறார் என்றால் இந்த மரணத்தில் போலீசார் மீது சந்தேகம் ஏற்படுவது நியாயமான ஒன்றுதான். இந்த உயிரிழப்புக்கு காரணமான தி.மு.க. அரசுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்த தங்கமணிக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சி.பி.ஐ. விசாரணை

ஒருபக்கம் தங்கமணி என்பவர் சாராய விற்பனையில் ஈடுபடுகிறார் என்றுகூறி அவரை விசாரணைக்கு போலீசார் அழைத்துச்செல்கின்றனர்.

மறுபுறம் அவரது மகன், போலீசார் தனது தந்தையிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டினர் என மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுப்பதைக்கூட போலீஸ் தடுக்கிறது என்றும் கூறப்படுகிறது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, போலீசாரே தவறான பாதையில் செல்கின்றனரோ என்ற சந்தேகம் நிலவுகிறது. போலீசார் மீதே சந்தேகப் பார்வை விழுகின்றநிலையில், இதை மாநில போலீஸ் விசாரித்தால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காது.

எனவே, முதல்-அமைச்சர் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த தங்கமணியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com