

நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலானவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். தற்போது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு 85-க்கும் மேற்பட்ட குழந்தைகளும், 105 பெரியவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளில் 74 குழந்தைகளும், 86 பெரியவர்களும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளிகளாக தினமும் மாணவ, மாணவிகள் உள்பட ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குவிந்து வருகின்றனர். நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாங்குநேரி, அம்பை, வள்ளியூர் பகுதியிலும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சிவகிரி, வாசுதேவநல்லூர், கடையம் பகுதியிலும் பரவலாக காய்ச்சல் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் மக்கள் சித்த மருத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் ஆகியவற்றை வாங்கி குடித்து வருகிறார்கள்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், "சீசன் நேர காலமாற்றத்தால் காய்ச்சல் ஏற்படுகிறது. நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவ துறை சார்பில் பல்வேறு இடங்களில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சுகாதார மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.