பண்ருட்டியை அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல்... மருத்துவமனையில் குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள்!

மர்ம காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை மற்றும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் சூழ்ந்தனர்
Published on

கடலூர்,

மர்ம காய்ச்சலால் இன்று பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான மக்கள் வந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மர்ம காய்ச்சல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் தீவிர பருவநிலை மாற்றம் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்ததால், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். இதனால் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதில் அங்குள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் திணறும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் மற்றும் பெய்த மழையினால் குடியிருப்புப் பகுதிகளில் பெருமளவில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி, அவை கடிப்பதன் மூலமே இந்த மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோரிக்கை

மேலும், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து தடையற்ற சிகிச்சை வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த மர்ம காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் தமிழக அரசு உடனடியாக தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com