

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் பணம்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (வயது 52) விவசாயி.
இவர் பரம்பூரில் உள்ள ஐஒபி வங்கியில் சொந்த தேவைக்காக நகையை அடைகுவைத்தும் தனது வங்கி கணக்கில் இருந்தும் ரூ. 1 லட்சத்தி 58 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளார்.
பின்னர் எடுத்த பணத்தை ஒரு பையில் போட்டு வங்கிக்கு அருகில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் தொங்க விட்டுவிட்டு பின்பக்கம் திரும்பி தான் அணிந்திருந்த கைலியை அவிழ்த்து கட்டியுள்ளார்.
அப்போது ஒருசில நிமிடங்களில் இருசக்கர வாகனத்தில் தொங்கவிட்டுருந்த பை காணமல் போனது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் பின்னர் அப்பகுதி முழுவதும் பணத்தைதேடி பார்த்தார். ஆனால் பணம் கிடைக்கவில்லை.
பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அறிமுகம் இல்லாத மர்ம நபர்கள் இருவர் அங்கிருந்து செல்வது பதிவாகியிருந்தது.
பின்னர், வங்கியில் பணம் எடுப்பதை நோட்டமிட்ட அந்த இரண்டு மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து நேரம் பார்த்து வாகனத்தின் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் சிசிடிவி காட்சிகளுடன் அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்து உள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி நகையை அடகு வைத்து எடுத்து சென்ற பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது